Thursday, 30 March 2017

சைக்கிளில் பழம் விற்ற சுரிந்தர் சிங், இன்று 12 உலக நாடுகளுக்கு பழங்கள் ஏற்றுமதி தொழில் புரியும் கோடீஸ்வரர்

விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுடன் கூடிய கடுமையான உழைப்பும் ஒருவரை எந்த உச்சத்துக்கும் கொண்டு செல்லும் என்பது அவ்வப்போது நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறது சுரிந்தர் சிங் என்பவரது ஊக்கமிகு கதை. பழங்களை சைக்கிளில் விற்பனை செய்த இவர், தற்போது மில்லியன் டாலர் தொழிலின் அதிபதியாகவும் உலகமெங்கும் 12 நாடுகளில் தனது நிறுவன கிளையை பரப்பி வெற்றியாளராக வலம் வருகிறார்.


சுரிந்தர் சிங் பஞ்சாபில் உள்ள அபோஹர் எனும் இடத்தில் பிறந்தவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை ஐந்தாம் கிளாசோடு மூட்டைக் கட்டிவிட்டார். பின், சைக்கிளில் பழங்களை விற்று வருமானம் ஈட்டத் தொடங்கினார். அப்போதிலிருந்து பழங்களுக்கான மதிப்பையும், அதன் விற்பனையில் உள்ள தொழிலையும் புரிந்துகொண்ட சுரிந்தர், அருகாமையில் இருந்த ஒரு சிறிய மார்க்கெட்டில் ஒரு பழக்கடையை தொடங்கினார். பழங்கள் விற்பனையில் தான் நன்றாக முன்னேறுவதை உணர்ந்த அவர், அதை மேலும் விரிவுப்படுத்த விரும்பினார். ஆனால் முதலீடு இல்லாமல் தவித்தார். வங்கியில் இருந்து லோன் எடுத்து மொத்த வியாபார கடையை திறந்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லையென்றாலும் தான் எடுத்த முயற்சியை பின்வாங்காமல் தொடர்ந்தார். 

தன் தொழிலுக்கு தனித்துவத்தை பெற, பஞ்சாபில் விளையும் ஒருவகை உயர்ரக ஆரஞ்சு பழவகையான கின்னோஸ் பழங்களை வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார் சுரிந்தர். இந்த விற்பனை சூடுபிடிக்க, அவருக்கு தொழிலில் அதிக லாபமும் கிடைத்தது. அவரின் பெயர் அந்த ஏரியா முழுதும் பிரபலம் ஆகியது. இது அவரை இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தெரியச் செய்தது. அதன்மூலம், கின்னோஸ் பழங்களை இந்தியா வெளியே பல நாடுகளுக்கு விற்பனை செய்ய வாய்ப்புகள் குவிந்தது. தற்போது அவர் ப்ரேசில், பாங்களாதேஷ், துபாய் மற்றும் உக்ரேன் என்று பல நாடுகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்கிறார். 

தொழிலை விரிவாக்கம் செய்ய, சிங் ஒரு பேக்டரியை திறந்து அதில் பழங்களுக்கு தேவையான க்ரேட்டுகள் மற்றும் நான்கு ட்ரக்குகளையும் வாங்கினார். சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒவ்வொரு ட்ரக்கும், கின்னோஸ் பழங்களை தென்னிந்தியா வரை சப்ளை செய்கிறது. தன் தொழிலை பெருக்கி, விரிவுப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் சுரிந்தருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ஒரு அற்புதமான குணம். அதற்கான தேவையான தொழில்நுட்பம், கட்டமைப்பையும் அவர் உருவாக்க தவறுவதில்லை. அப்போது தான் பழங்கள் கெடாமல் ப்ரெஷ்ஷாக இருக்கும் விற்பனையும் பெருகும் என்ற நம்பிக்கை உடையவர். 

தரத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதற்கு சமரசம் செய்யாமல் நல்ல பழங்களை விற்பனை செய்வதில் குறியாக அவர் இருப்பதே இந்த வெற்றிக்கு காரணம் ஆனது. அதனால் தான் அவரால் உலகமெங்கும் கோடி ரூபாய்களில் தொழில் செய்யமுடிகிறது. 400 ஊழியர்களை கொண்டுள்ள இவரது தொழிலின் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு கோடிகளை தாண்டுகிறது. இவர் தனது ஊழியர்களுக்கு ஊக்கமிகு முதலாளியாக வலம் வருகிறார். அதே போல் விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிக்காட்டி அவர்களை அதில் தொழில் செய்ய ஊக்குவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

ஆய கலைகள் 64

ஆய கலைகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கற்க வேண்டிய கலைகளாக பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன . ' அறுபத்துநாலு கலை '...