சலித்துப்போகுமே என்றுகூடச் சிந்திக்காமல் ‘செயலிழந்த அரசு’ என்று அரசாங்கத்தை ஓயாமல் விமர்சிப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கம். அரசாங்கத்தின் நிர்வாகத் துறவு என்ற விமர்சனம் அந்த வகையைச் சேர்ந்ததல்ல. நிர்வாகத் துறவு என்பது, சில அரசுகளின் கோட்பாடாக, கள உத்தியாகக்கூட இருக்கலாம். சீமைக் கருவேல விவகாரம் நமது அரசாங்கத்தைப் பற்றி இப்படி ஒரு அசலான அரசியல் விமர்சனத்தைச் செய்துள்ளது.
இன்றைக்குப் பிறந்த ஞானத்தின் ஆர்வத்தோடு சமுதாயம் சீமைக் கருவேல மரங்களை இப்போது அகற்றிவருகிறது. இவற்றை அகற்ற அரசுக்கு உத்தரவிடும்படி குடிமக்களைப் போலவே அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் (வைகோ) நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த மரங்களால் கெடுதி வரும் என்றோ, வராது என்றோ மற்ற வழக்குகளில் செய்வதுபோல் வாதம் செய்ய யாருக்கும் வழியில்லை. தொடர்புடைய துறைகளுக்கும், உடைமையாளர்களுக்கும் இவற்றை அகற்றும்படி கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒத்துழைக்காத உடைமையாளர்களின் மரங்களை அப்புறப்படுத்தி செலவுத் தொகையை வசூலிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்று கண்காணிக்கும் பொறுப்பை மாவட்ட நீதிபதிகளிடமும், அட்வகேட் கமிஷனர்களிடமும் ஒப்படைத்தது. இதற்குத் தனிச் சட்டம் இயற்றி நிதி ஒதுக்கும்படியும் அரசுக்கு உத்தரவு. இப்படியாக இந்த நிகழ்வுத் தொடர் தானாகவே எங்கு வரவேண்டுமோ அங்கு வந்து இப்போதைக்கு நின்றிருக்கிறது. அதாவது, அரசிடமும் சட்டமியற்றும் பொறுப்புள்ளவர்களிடமும்.
கவலைக்கும் இடமுண்டு
நம் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சிலர் மகிழ்வது நியாயம்தான். ஆனால், நமது ஜனநாயகம் எப்படிச் செயல்படுகிறது என்பதுபற்றி உரத்து ஒலிக்கும் விமர்சனம் ஒன்றும் இதில் உள்ளது. பொதுநல மனுக்களை ஏற்று அரசுக்கு உவப்பில்லாத தீர்வுகளைத் தரும் நீதித் துறை அதீத முனைப்பில் செயல்படுவதாகச் சொல்வதுண்டு. அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே இருக்கும் கோடு ஒன்று இல்லாததுபோலவே நீதித் துறை நடந்துகொள்வதாகவும் சொல்வார்கள். இப்படி நீதித் துறைக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்சினையாக இதைக் குறைத்துவிடக் கூடாது. ஜனநாயக சமுதாயத்தில் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள உறவின் அங்கமாக இதனைப் பார்க்க வேண்டும். அதுதான் இதன் முழுப் பரிமாணம்.
நடுவில் அரசாங்கம் ஒன்று வேண்டுமா? நீதித் துறையும் அதிகாரிகளும் இருந்தாலே போதும் போலிருக்கிறதே என்று தோன்றியிருக்கும். நல்லது நடக்க வேண்டுமென்றால், குடிமக்கள் அரசாங்கத்தை நீதிமன்றத்துக்கு இழுக்கும் வழக்காடிகளாக வேண்டுமா என்று கேட்கத் தோன்றும். பொதுப் பிரச்சினைகளில் ஜனநாயக அமைப்பு செயல்படும் முறை தெரிந்ததுதான். பிரச்சினைகளைப் பற்றித் துறைகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சட்டமன்றத்துக்கு, அதன் வழியாக மக்களுக்குப் பதில் சொல்வார்கள். மாறாக, மற்றொரு அதிகார அமைப்பின் முன் சென்று, தனது அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டிய நிலைமை உருவானது. இதன் அடுத்த பக்கத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும். சீமைக் கருவேலம் செய்யும் தீமைக்கு நீதிமன்றம் சென்றுதான் நிவாரணம் பெற வேண்டும் என்ற நிலைமையில் தன் குடிமக்களை வைத்திருக்கும் அரசாங்கத்தை எப்படி மதிப்பிடலாம்?
இது பழகிப்போன ஒன்றாகக்கூட இருக்கும். இதற்கு முன்பும் பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிடவேண்டி இருந்தது. இதைப் பற்றிய ஆய்வை மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு அட்வகேட் கமிஷனர்களையும் நீதிமன்றம் நியமித்தது. கும்பகோணத்திலிருந்த குளங்கள், வாய்க்கால்களின் தற்போதைய நிலைமையினை ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நீதிமன்றமே நியமித்துள்ளது.
அசலான அரசியல் விமர்சனம்
மக்கள் கோரிக்கை அனுப்பினால் போதாது. தங்கள் பிரதிநிதிகளை இதற்கெல்லாம் நம்பிப் பயனில்லை. சட்டப் பேரவையில் இவற்றைப் பேச மாட்டார்கள். போராட்டங்கள், பொதுமேடைகள், ஊர்வலங்கள் எல்லாம் ஆண்டுமாறிப்போன ஜனநாயக முறைகள். ஆகப் பெரிய ஜனநாயக அங்கமான அரசியல் கட்சிகளும் இவற்றைக் கவனிக்காது. ஒரு அரசியல் கட்சித் தலைவரே அரசாங்கத்தின் மீது பொது நல வழக்கு தொடரும்போது, இதற்கெல்லாம் வேறு சாட்சியமா நான் தேட வேண்டும்? சீமைக் கருவேல மரப் பிரச்சினை, நமது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது விழுந்த விமர்சனம்.
அந்நிய ஆட்சி எவ்வளவு நல்ல நிர்வாகத்தைத் தந்தாலும், சுதந்திர ஆட்சிக்கு ஈடாகாது என்று விடுதலைப் போரை அப்போது நியாயப்படுத்தினார்கள். அந்நிய ஆட்சியில் செய்யப்பட்ட 1919-ம் ஆண்டுச் சட்டம் ஒன்று உண்டு. அதன் அடிப்படையில் வருவாய் வாரியத்தின் நிலை ஆணை ஒன்றும் உண்டு. பயிருக்கு, மனிதருக்கு, மரங்களுக்குக் கெடுதிசெய்து, வாய்க்கால்களைத் தூர்த்துவிடும் விஷச் செடிகளைப் பற்றிய சட்டம். இன்ன செடி என்று அரசு அறிவித்து, ஆட்சியர் அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவார். அந்தந்த இடங்களின் கைப்பற்றுதாரர் இதை அழித்து மீண்டும் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறுபவர்கள் குற்றம் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். ஆய்வர்களே அந்த இடங்களில் செடிகளை அகற்றி, கைப்பற்றுதாரர்களிடம் செலவுத்தொகையை வசூலிக்கலாம். விஷச் செடிகள் இருக்கும் இடம் அரசுக்குச் சொந்தமானால், சட்டம் அரசாங்கத்தையும் ஒரு கைப்பற்றுதாரராகக் கருதும் என்ற சுவாரசியத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் மாற்றுக் களம்
சுதந்திரமான ஜனநாயக நாட்டில், இந்த வேலைக்காக நீதிமன்றத்தை இப்போது மக்கள் நாட வேண்டியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? ஜனநாயக முனைப்பில் மக்கள் தங்கள் உரிமைகளை எல்லா வழிகளிலும் வலியுறுத்துகிறார்கள் என்று கொள்ளலாம். வழக்கமான ஜனநாயகக் களங்களில் தங்கள் கோரிக்கைகளைப் பேச முடியாமல் மக்கள் வேறு களங்களைத் தேடுகிறார்கள் என்றும் சொல்லலாம்.
மெரினா கடற்கரை இப்படித்தான் ஒரு மாற்றுக் களமாகப் புகழடைந்தது என்று கண்டு நமது அரசியல் ஆய்வை நாமே மெச்சிக்கொள்ளலாம். அரசின், சட்டமன்றத்தின் தீர்மானம் வேண்டாம் என்று மறுத்து, செயல்படுத்தும் கட்டாயத்தை உருவாக்கும் நீதிமன்றத் தீர்ப்பை மக்கள் கேட்கிறார்கள் என்று சொல்லலாம். சட்டமன்றமல்ல, நீதிமன்றம்தான் மக்கள் தங்களின் ஆட்சியாளர்களை எதிராளியாக்கி, எதிர்நின்று உரையாடும் களமாகிவிட்டது என்றும் சொல்லலாம். நீதித் துறையே அரசாங்கத்தின் வழக்கமான பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதை நமது ஜனநாயகத்துக்கு உருவாகியுள்ள புதிய கவலையாக நாம் கருதுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் மோந்தெஸ்கு என்று ஒரு அரசியல் அறிஞர்.. அரசு, சட்ட மன்றம், நீதித் துறை மூன்றும் தனித் தனியாக, சுதந்திரமாக இருப்பதுதான் மக்களின் சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு என்று அவர் சொன்னார். அவருடைய அச்சம் அரசாங்கத்தின் அதீத அதிகாரம் தொடர்பானது. அவர் காலத்துக்கு முன்பு இவை மூன்றுமே ஒன்றாக இருந்திருக்கலாம். இங்கிலாந்தில்கூட நீதிபதிகள் உத்தரவிட்டு, சாலைகளையும் பாலங்களையும் செப்பனிட்டதாகப் படிக்கிறோம். அந்த நிலையை நமது ஜனநாயகம் நெருங்கியிருக்கிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இன்மைக்கு வன்முறை மட்டுமே அடையாளம் என்று சொல்ல முடியாது. அரசு செய்ய வேண்டிய வழக்கமான பணிகளுக்குக்கூட நீதிமன்றத்தை நாட வேண்டியிருப்பதும் அந்த நம்பிக்கையின் தேய்வுக்கு அறிகுறி.
No comments:
Post a Comment